Wednesday, October 29, 2014

தமிழ் மொழிக்கு சம உரிமை பெற்றுக் கொள்வது ஒவ்வொரு தமிழனுக்கும் தலையாய கடமை..



(சலசலப்பு என்ற வலைத்தளத்தில் நான் படித்ததை உங்களுக்காக பதிவிடுகின்றேன்.சலசலப்பு வலைதள உரிமையாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்)


ஒரு சமூகத்தின் கௌரவம் அச்சமூகத்தின் தாய் மொழிக்கும் சமயத்திற்கும் கிடைத்துள்ள நடைமுறையில் அனுபவிக்கின்ற உரிமையை வைத்தே கணிப்பிடப்படுகின்றது. தாய் மொழியைத் தமது அன்றாடச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது தடுக்கப்பட்ட சமூகமும் அதேபோல் தமது சமயத்தை தடையின்றிப் பின்பற்ற முடியாத சமூகமும் உயிரற்ற நடைப்பிணத்திற்கு சமமென்றே கூறவேண்டும்.
அதனால் தான் நாகரிக உலகம் மொழிக்கும் சமயத்திற்கும் முதன்மையிடம் கொடுத்துள்ளது. மொழியின்றேல் மூச்சில்லை என்பர். ஒரு சமூகம் தனது மொழியைப் பயன்படுத்தாதபோது உயிரற்ற சமூகமாகின்றது. அதேபோல் மொழியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் போது ஒரு சமூகத்தையே கொலை செய்வதாயமைந்து விடுகின்றது.
நமது நாட்டில் நமது தாய் மொழியாக தமிழின் நிலையை நோக்கும் போது ஒருபுறம் கொலை செய்யப்படுவதையும் மறுபுறம் தற்கொலை செய்து கொள்ளப்படுவதையும் காணமுடிகின்றது.
ஆம். காலத்திற்கு காலம் சட்டங்கள் மூலமும் வேறு பல வழிகளிலும் தமிழ் மொழியின் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு உள்ளது. தமிழ் மொழி உரிமையை நிலைநாட்ட பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களை மானமுள்ள தமிழர்கள் மேற்கொண்ட வரலாறும் நிறையவேயுள்ளன. தமிழ் மொழியின் உரிமையை தாமே குழி தோண்டிப் புதைக்கும் தமிழர்களும் உள்ளனர் என்பதும் உண்மை.
உரிமையுடன், கௌரவத்துடன், இந்நாட்டில்  தலை நிமிர்ந்து வாழ  மொழியுரிமை பேணப்படுவது அவசியம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது காட்டும் பாசம். அதைப் பேணிக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மவர்களுக்கு இல்லை என்பதை எண்ணும் போது வேதனையாகவுள்ளது.மாற்றார் எம்மை அடிமைப் படுத்துகின்றார்கள் என்னும் போது நமது மொழியுரிமையைப் பயன்படுத்தத் தடுக்கின்றார்கள் என்றே பொருள். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் சிந்திக்கும் ஆற்றல் இழந்தவர்கள். சுயபுத்தியற்றவர்கள் என்றே கணிக்கப்படுவர். அதுவே உண்மை நிலை இலங்கையில் இரு சமூகங்களுக்குமிடையே இனப்பிரச்சினை உருவாகி இன்று பூதாகாரமாக உலகளாவிய  அளவில் நம் நாட்டுப் பிரச்சினை  பேசப்படுவதற்கு அடித்தளமிட்டது. தமிழ் மொழியின் உரிமைப் பறிப்பே என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்து தமிழ் மொழியின் சகல பயன்பாட்டு உரிமைகளும் பறிக்கப்பட்டு  தடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே.  இந்நாட்டில் இரு இனங்களுக்கிடையே வேற்றுமை, சந்தேகம், குரோதம் என்பன ஏற்பட்டது மட்டுமன்றி, காலத்திற்குக் காலம் நாடளாவிய ரீதியில் இனக்கலவரங்கள், அதன் மூலம் கொலைகள்கொள்ளைகள், தீவைப்புகள் எனப்பல தரப்பட்ட கொடுமைகள் இடம்பெற்றன. கடந்த முப்பது ஆண்டுகால கோரயுத்தம் என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்படுகின்ற ஆயுதப் போராட்டத்திற்கு அச்சாணியாயமைந்தது மொழிப் புறக்கணிப்பேயாகும்.
தமிழ் மக்கள் கேட்டது தம்மையும் வாழவிடு என்றேயன்றி ஆளவிடு என்று அன்று கேட்கவில்லை. அதைப்புரிந்து கொள்ளாத பெரும் பான்மையின அரசியல்வாதிகள் தமிழ் மொழிக்கு நாட்டில் நிர்வாக மொழி உரிமை வழங்கப்பட்டால் அது பிரிவினைவாதமாகும்இ பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்று சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சுருட்டி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.இதுவே உண்மை குறித்த தவறான கோட்பாட்டின் பின்விளைவை சரியாகப் புரிந்து கொண்ட சிங்களத் தலைவர்கள் கலாநிதி என்.எம்.பெரேரா 1955.10.19 ஆந் திகதி அன்றைய பாராளுமன்றத்தில் நாடு முழுவதும் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் என்று பிரேரணையொன்றை முன்மொழிந்தமையும் அப்பிரேரணையை எட்மண்ட் சமரக்கொடி வழிமொழிந்தமையும் பாராளுமன்ற பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளன.
அதேபோல்தனிச் சிங்கள சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா ஒரு மொழியென்றால் இருநாடுகள் இரு மொழி என்றால் ஒரு நாடு என்று கூறியமையும் பதிவேடுகளில் பதிவாகியுள்ளன.
1956
ஆம் ஆண்டில் தமிழ் தலைவர்கள் தமிழ்ப் பொதுமக்கள் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டமை 1958 இல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இனக்கலவரம் அதைத் தொடர்ந்து 1961 இல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சத்தியாக் கிரகப் போராட்டம் 1977, 1979, 1981, 1983 என்று காலத்திற்கு காலம் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கெதிரான இனவெறிப் பயங்கரவாதத்தாக்குதல்கள் என்று பல சம்பவங்கள் மொழியுரிமைத் தடையின் பின் விளைவுகளாயமைந்தன. இன்று விசாரணையின்றி பல ஆண்டுகாலமாகச் சிறைகளில் அரசியல் கைதிகளாக  வேதனையை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களின் அவல நிலைக்கு வித்திட்டதும் தமிழ் மொழிப் புறக்கணிப்பே என்பதை ஆழமாகச் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்டில் பிரிவினை வாதத்திற்கு வித்திட்டது தமிழ் மொழிப் புறக்கணிப்பேயன்றி வேறல்ல.
இன்று நோயின் அடிப்படைக் காரணி பின்தள்ளப்பட்டு விட்டது. மறக்கப்பட்டு விட்டது. மொழி உரிமையென்பது சமுதாய உரிமை என்பது கண்டு கொள்ளாமல் விடப்பட்டு அது சமுதாய ஆட்சியுரிமை என்று புதுவடிவம் கொண்டுள்ளது, திசைமாறியுள்ளது, மாற்றப்பட்டுள்ளது. நாம் சிந்திக்க வேண்டும். தமிழர்கள் ஆட்சியமைத்து விட்டால்  தமிழ்ச் சமுதாயம் உரிமைகள் பெற்றுவிடப் போதுமானதல்ல. தமிழ் மொழியும் ஆட்சியில் அமரவேண்டும். அமர்த்தப்பட வேண்டும். அதுவே தமிழர் சமுதாயத் தலைநிமிர்வுக்கான தேவையாகும்.
ஒரு தமிழன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத்துடனான தொடர்புகளையும் தயக்கமின்றி, தடையின்றி, திருப்திகரமான முறையில் இந்நாட்டில் ஆற்றிக் கொள்ள வழி வரும் நாளே தமிழ் மக்கள் இந்நாட்டில் வாழ்வுரிமை பெற்ற நாளாகும். உயிர்ப்புடன் சமத்துவமாகக் கணிக்கப்படும் நாளாகும்.
இந்நாட்டில் அதிகாரப் பசிகொண்ட பெரும்பான்மையின் தமிழ் மொழிப் புறக்கணிப்பின் மூலம் விட்டதவறு இன்று சட்டரீதியாக அரசியலமைப்பின் மூலமாக திருத்தப்பட்டுள்ளது. விட்டதவறு சீர் செய்யப்பட்டு இன்று இலங்கையின்  அரசியலமைப்பில் சிங்களத்துடன் தமிழ் மொழியும் தேசிய மொழிகளாக, நிர்வாக மொழிகளாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மொழிப் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலமாகவோ நீதிமன்றத்தின் மூலமாகவோ நிவாரணம் பெற ஏற்பாடுகளும் உள்ளன.
இப்போது பந்து யார் பக்கம்? சிந்திக்க வேண்டும்.  நம்மில் எத்தனை பேர் இதுபற்றி சிந்திக்கின்றோம். சட்டரீதியாகத் தமிழ் மொழிக்குப் பயன்பாட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதைப்பயன்படுத்துகின்றோமா? தமிழ் மொழியின் உரிமைப் புறக்கணிப்பு அல்லவா நமது சமூகம் எதிர்கொண்ட முதலாவது பயங்காரவாதத் தாக்குதல்? அதைப் புரிந்து கொண்டுள்ளோமா?
தமிழ் மொழியின் உரிமைப் புறக்கணிப்புக்கு எதிராக நம்மவர்கள் அன்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் பயனற்றவையா? வீணானவையா? தேவையற்றவையா? நாட்டில் இடம்பெற்ற பல்வேறு துன்பகரமான சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் முகம் கொடுத்தமை தேவையற்றவையா? சொத்து சுகம் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தால் போதும், மொழியுரிமை அவசியமில்லை என்ற நோக்கு நாகரிகமானதா?
இன்று பெரும்பாலான நம்மவர்கள் செல்வந்த வீடுகளில் கூட்டிலடைக்கப்பட்டு சிலவேளைகளில் காரின் ஆசனத்திலமர்த்தி வீதிகளில் பவனிவரும் அருஞ்சுணங்கனின் நிலையில் வாழ்வது உரிமையுடன் கூடிய வாழ்க்கை என்று நம்புகின்றனர். வசதியான வீடு, வாகன வசதி, உல்லாச வாழ்க்கை இவையே உரிமையின் சின்னங்கள், உரிமையாக அனுபவிக்க வேண்டியவை என்று நம்பியுள்ளனர்.
கூட்டில் அடைக்கப்பட்டு  சகல வசதிகளும் செய்யப்பட்டிருந்தாலும் அந்த அருஞ்சுணங்கனின் வளைந்த வாலும் நிமிர்வதில்லை, அதன் மொழியான குரைக்கும் ஒலியும் மாறுபடுவதில்லை. ஆனால் பகுத்தறிவு கொண்ட, சிந்திக்கும் நாகரிகமான மனித குலத்தவரான நம்மவரில் பலரோ இயல்பை மாற்றி மொழியையும் புறந்தள்ளி நாயினும் கீழாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை எண்ணி வேதனைப்படவே முடிகின்றது வீட்டு மொழியாகத் தமிழ் பயன்படுத்தப்படாத நம்மவர் வீடுகளும் உள்ளன. அம்மா என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தாத தமிழ்ப் பிள்ளைகளும் அநேகர்.
இன்று நாட்டில் மும்மொழித்திட்டம் அமுலில் உள்ளது. அதாவது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் ஏதாவதொன்றை ஒருவர் தனது பயன்பாட்டு மொழியாகக் கொள்ளலாம். நடைமுறையில் இடம்பெறுவது என்ன? தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கின்றனர். தமிழ் மொழிக்கு நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமை என்னவென்பது புரியாதவர்களாக வுள்ளனர்.  தமிழ் மொழியைப் பொதுத் தேவை  களில் பயன்படுத்த வெட்கப்படுகின்றனர். அல்லது அஞ்சுகின்றனர். இதுவே இன்றைய யதார்த்த நிலையாயுள்ளது.
எடுத்துக் காட்டாகக் கொழும்பில் வெள்ளவத்தையில் உள்ள வங்கியொன்றை எடுத்துக் கொண்டால் அதன் வாடிக்கையாளர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாகவும்  இருப்பதுடன் வங்கி முகாமையாளர் உட்பட  அநேகமானவர்கள் தமிழர்களாகவும் வங்கியில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கான  படிவங்கள் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன.
நமது தமிழர்களின் நூற்றுக்கு இரண்டு அல்ல ஒரு வீதத்தினராவது தமது சுயதேவைஉரிமைக்கு தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில்லை என்பது ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் படிவங்கள் இருந்த போதும் தமிழில் படிவத்தைப் பூர்த்தி செய்யாது ஆங்கிலத்தில் பூர்த்தி செய்கின்றனர். தமிழில் போதிய அறிவிருந்தும் ஆங்கிலத்தை சுயமாகப் பயன்படுத்த முடியாத  நிலையில், இருப்போரும் எவராவதொருவரின் உதவியுடன் ஆங்கிலத்தில் படிவங்களைப் பூர்த்தி செய்வதைக் காண கூடியதாகவுள்ளது. தமிழின் உரிமையை, செல்வாக்கைத் தமிழர்களே புறக்கணிக்கின்றனர்.
இந்நிலை வங்கிகளில் மட்டுமல்ல ஏனைய அரச அலுவலகங்களிலும் காணப்படுகின்றது. தமிழ் மொழியில் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ள சற்றும் முன்வராதவர்கள், புறக்கணிப்பவர்கள் பலர் தமிழ் மொழியின்  உரிமை, தமிழரின் உரிமை தொடர்பில் சந்திக்குச் சந்தி கூடிக்கதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பதையும் அவதானிக்காமலிருக்க முடிவதில்லை.
மொழி உரிமையைக் காரணம் காட்டி, முன்வைத்து இந்நாட்டில் பல்லாயிரம் உயிர்கள் அநியாயமாகக் காவு கொடுக்கப்பட்டுள்ளன. அதை மறந்து கிடைத்துள்ள, நடைமுறையில் சட்ட ரீதியாகப் பயன்படுத்த, பயன் பெற வழி செய்யப்பட்டுள்ள தமிழ் மொழியின் உரிமையைப் புறந்தள்ளிவிட்டு இன உணர்வு, இன உரிமை என்று கூக்குரலிடுபவர்கள், கூச்சலிடுபவர்கள் நல்ல நடிகர்களாகவே நோக்கப்பட வேண்டியவர்கள்.
வளமும் வலிமையும் தரமும் கொண்ட தமிழ் மொழியைப் புறக்கணிப்பது நாகரிகம் என்று எண்ணும் தமிழர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடிஎன்று பாடியுள்னார். அதை நிதர்சனமாக நம்மால் காண முடிகிறது. நான்கு சுவர் கொண்ட  மண்டபத்திலே கூடி தமிழ் மொழியின் சிறப்பு, பழமை, வளம், இலக்கிய நயம், இசைச்சிறப்பு என்று பல சொற்பொழிவுகள் ஆற்றுவதும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து  உரையாற்றுவதும் கவியரங்குகளில் உணர்ச்சி வயப்பட்ட கவிதைகள் பாடுவதும்  கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்று பட்டிமன்றம் நடத்துவதும் தமிழ் மொழியின் பெருமைக்கு, உரிமைக்கு வழி அமைக்கும் என்ற புத்திஜீவிகளும் கல்விமான்களும்  மொழி ஆர்வலர்கலெனப்படுவோரும் நம்மிடையே பாரதியாரின் கண்டுபிடிப்பின்படியானோர் நிறையவேயுள்ளனர்.
தமிழ் மொழியின் உரிமை, தமிழின் பெருமை, தமிழனின் தன்மானக் காப்பு என்பனவற்றை நான்கு சுவர்களுக்குள் அடைத்து விடக்கூடாது தமிழ் மொழியில் அன்றாட நடமுறை உரிமையைச் செயற்படுத்துவதன் மூலம் இந்நாட்டில்  தமிழ்  மொழிக்குச் சமஉரிமை   பெற்றுக் கொள்ள முடியும். தமிழனும் தன்மானத்துடன் இந்நாட்டில் சமத்துவமாக வாழ முடியும்.
கண்களை இழந்தபின் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோஎன்ற கூற்றுப்படி தமிழ் மொழியின் உரிமைகளைப் பயன்படுத்தாது இழந்து விட்டு தமிழ் மொழியின் உரிமை பற்றிய பேச்சினால் புத்தியுள்ளவர்கள் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள். பேசுவார்கள் என்பதை மானமிருந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

Maintained By Techmarketworld