Saturday, February 28, 2015

சட்டக் கல்லூரியை இடம் மாற்றச் சொன்னது?


 

சட்டக் கல்லூரியை இடம் மாற்றச் சொன்னதே தி.மு.க-தான்! அம்பலமாகும் ஆதாரம்

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சென்னையின் புறநகருக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியானதில் இருந்து கல்லூரி வளாகம் போராட்டக்களமாகி இருக்கிறது. கல்லூரிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டும் இன்னும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
இப்போது அரசியல் கட்சிகளும் களம் இறங்கிவிட்டன. அரசியல்வாதிகளின் முரண்பாடான பேச்சுகளுக்கு ஓர் உதாரணமாகவும் இருக்கின்றன கட்சிகளின் நடவடிக்கைகள்.
கடந்த 7-ம் தேதி சனிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் போய்ப் பார்த்த மு.க.ஸ்டாலின், 'சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் நியாயமான போராட்டத்துக்கு தி.மு.கவின் ஆதரவு முழுமையாக உண்டுஎன்று பேட்டி கொடுத்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், '20-ம் நூற்றாண்டின் இணையற்ற சட்ட மேதைகளை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இங்கிருந்து இடம் மாற்றக் கூடாது' என்று அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'புதிய தலைமைச் செயலகம் வேண்டாம் என்று சொல்லி பழைய தலைமைச் செயலகத்திலேயே சட்டசபையை நடத்த முற்பட்ட அரசாங்கம், ஒரே நாளில் அந்தக் கட்டடத்தைப் பழுதுபார்த்துப் பயன்படுத்தியது. சட்டக் கல்லூரி கட்டடத்தையும் இரண்டு நாட்களில் சரிசெய்துவிட முடியும். உங்களுக்காக நாங்கள் போராடத் தயார். நீங்கள் படிக்கப் போங்கள்'' என்று உருக்கமாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் உண்மையில் இந்த விவகாரம் எப்போது கிளம்பியது தெரியுமா?
கடந்த நவம்பர் 12, 2008-ம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், சட்டக் கல்லூரிக்குள் இரண்டு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு மிகப் பெரிய கலவரமாக மாறியது. சட்டக் கல்லூரி மைதானம் ரத்தக்களறியானது.
ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவனின் காதை வெட்டித் தள்ளவும், காதை வெட்டிய மாணவனை, மற்றொரு மாணவர் கும்பல் சூழ்ந்து கொண்டு உருட்டுக் கட்டைகளால் பிளந்தெடுத்த காட்சிகள் அப்போது தமிழகத்தைப் பதற வைத்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார். ஆறு மாதங்களுக்குள், தன்னுடைய அறிக்கையை தமிழக அரசாங்கத்திடம் அந்த கமிஷன் சமர்ப்பித்தது. அதில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.
1. சட்டக் கல்லூரிகளில் விடுதி வசதி, நூலகம், விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும்.
2. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டம் படிக்கும் மாணவர்களால் அதிக இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகளும் உட்கட்டமைப்பும் இல்லை. இதன் காரணமாகக் கற்பித்தலில் குறைபாடு, போதிய பயிற்சியின்மை, நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்றவற்றில் குறைபாடு நிலவுகிறது.

3. இதைக் கருத்தில் கொண்டு, இளநிலை சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு சென்னையின் புறநகரில் மூன்று இடங்களில் புதிதாக சட்டக் கல்லூரிகளை அமைத்து, அவர்களை அங்கு மாற்றலாம். தாம்பரம், எண்ணூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அந்தக் கல்லூரிகளை அமைக்கலாம்.
4. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை முழுவதுமாக முதுநிலை சட்டம் படிக்கும் மாணவர்களுக்காக ஒதுக்கிவிட வேண்டும். அவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் இருப்பதாலும் வழக்கறிஞர்களின் அருகில் இருப்பதாலும் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்.  
இவ்வாறு  அறிக்கையை கொடுத்த நீதிபதி சண்முகம், 20 ஆண்டுகள் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி சண்முகத்தின் இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டு, பொது விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின் அரசாணையாக வெளியிடப்பட்டது. அரசாணை 07.07.2009 அன்று போடப்பட்டது. அதில் இந்த இடமாறுதலையும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளார்கள். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. துணை முதலமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அப்போது, தி.மு.கவுடன் பா.ம.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியினர் நல்ல நட்போடு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு தி.மு.க ஆட்சியை ஆதரித்தவர்கள் இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!
அரசியல் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் ஆதரவைத் தெரிவிப்பதற்கும் உள்ளே எவ்வளவு அரசியல் இருக்கிறது பாருங்கள்!
நன்றி-விகடன்

ஆதார் - மானியம்



5 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் மூலம் மானியம் 300 மாவட்டங்களில் முதல் கட்டமாக அமலாகிறது

 
புதுடெல்லி : ஆதார் எண் மூலம் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதன்மூலம், சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன்பிறகு ஆதார் அட்டையை எந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கும் கட்டாயமாக ஆக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. கட்டாயம் இல்லை என்றதால் இதை எடுப்பதற்கு மக்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், பாஜ ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதோடு, ஆதார் மூலமான திட்டங்களை பாஜ செயல்படுத்தாது என்ற கருத்து கூறப்பட்டது.
இந்நிலையில், ஆதார் அட்டை மூலம் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்குவது மற்றும் அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இதுவரை சுமார் 67.4 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இதற்கு சுமார் ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.  ஆதார் அட்டை மூலம் மானிய தொகையை வங்கிகளில் நேரடியாக செலுத்தும் நடைமுறையை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்த முடியும் என பிரதமர் நம்புவதாக அரசு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, முந்தைய அரசு முடிவின்படி 5 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை மூலம் பலன்கள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப ஆதார் தடை உத்தரவில் மாற்றங்கள் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளது.இதன்படி, சமையல் எரிவாயு மானியம், முதியோர்/ விதவை/ ஆதரவற்றோர் உதவி தொகைகள்கல்வி உதவித்தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.
திட்ட கமிஷன் மதிப்பீட்டின்படி தற்போது ஆதார் திட்டத்தின்படி மாநிலங்களுக்கு ஏற்ப 25 முதல் 60 சதவீதம் வரை மானிய தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதை 80 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 300 மாவட்டங்களில் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்துக்கு பிறகு ஆதார் திட்ட செயல்பாடுகளில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. இவ்வாறு நேரடியாக மானியம் வழங்குவதன் மூலம் எரிபொருளுக்காக வழங்கும் அரசு மானியம் 20 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மானிய செலவாக ரூ.63,427 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Maintained By Techmarketworld