Monday, March 2, 2015

மனித உரிமைகள் காப்போம்!


 
நவம்பர் 25-ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமானதால், அதற்கான விழிப்புணர்வை மனித உரிமை நாளான டிசம்பர் 10-ஆம் தேதி வரை ஏற்படுத்த வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோள்.
ஆனால், இடைப்பட்ட நாள்களில்தான் மனித சமுதாயத்திற்கு எதிராக எத்தனை வன்முறைகள்? சிட்னி மாநகர சிற்றுண்டி விடுதியில் மும்பையின் 26/11 தினத்தாக்குதல் போல் ஒரு பயங்கரவாதியின் வன்முறை; பாகிஸ்தான் பெஷாவர் நகரில் ராணுவ நிர்வாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 132 குழந்தைகள் படுகொலை. ஈவிரக்கமில்லா தலிபான் பயங்கரவாத மிருகங்களின் கொடுஞ்செயல்.
"விஷப்பாம்பை பாலூட்டி வளர்க்கிறார்கள். அது வளர்த்தவர்களையே தாக்கும் நாள் வெகுதூரம் இல்லை' என்றார் முந்தைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். பயந்தது போலவே பாகிஸ்தானை தாக்கிவிட்டது தலிபான்.
குற்றவியல் ஆளுமையில் காவல் துறை சிறைத் துறை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜனநாயகத்தின் தூண்களாக கருதப்படுபவை நீதித் துறை, மக்கள் மன்றம், அரசாளுமை, ஊடகங்கள்.
காவல் துறையில் எல்லா நடவடிக்கைகளும் நீதியைச் சார்ந்து இருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும்.
நீதியரசர் கிருஷ்ணய்யர் காவல் துறையை சாடியிருக்கிறார். தவறுகளைக் கண்டித்திருக்கிறார். அதேசமயம் காவல் துறை சுதந்திரமாக சட்டத்திற்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல் துறையை மேம்படுத்த விழைந்திருக்கிறார்.
மனித உரிமைகள், பொது நலன் பாதுகாப்பு இவை இரண்டும் வளமிகு சமுதாயத்திற்கு இன்றியமையாதவை. நீதியரசரின் எந்த ஒரு தீர்ப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் இவ்விரு கோட்பாடுகள் அடிப்படையாக இருக்கும்.
"டைனமிக் லாயெரிங்' என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு எல்லோரும் படிக்க வேண்டியதொன்று. முக்கியமாக இளைஞர்கள் படித்துப் பயனுற வேண்டும்.
சட்ட ஆளுமையை வழக்குரைஞர் பக்தியோடும், சிரத்தையோடும் கையாள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆன்மிக வழியில் பக்தியோடும் சிரத்தையோடும் வழக்காடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.
மேலும், அரசியல் சாசனம் திருத்தப்பட்டு, செயல்திறன் மேம்படுத்துவதற்கு நீதித்துறை வழக்குரைஞர்கள் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பழங்குடியினர் உரிமைகளுக்கு பல தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார். அரசியல் சாசனம் பழங்குடியினருக்கு உதவியாக இல்லை என்பதை “Indian constitution is “ Deaf and dumb in these tribal region. The locomotive of people’s liberation is the spirit of autonomy, more Human rights, less centralization less illusions about peace through Police action” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தனது தீர்ப்புகள் மூலம் அவர் தொடாத துறையே இல்லை. எடுக்காத மக்கள் நலம்  சார்ந்த பிரச்னையே இல்லை எனலாம்.
மாசுக்கட்டுப்பாடு, சுற்றுப்புற சூழல், பழங்குடியினர் உரிமைகள், புவி சூடாதல், மதச்சார்பின்மை, அரசு ஊழியர் உரிமை, ஓய்வூதியம் பெறுவோர் உரிமை, பொதுநல வழக்குகள், விலங்குகள் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடன் நல்லுறவு, இலங்கை வாழ் தமிழர்களின் உரிமை என்ற இவரது பல்நோக்கு சிந்தனையின் வீச்சு கணக்கிலடங்காது.
காவல் துறை மேம்பாட்டிற்கும் விஞ்ஞான அடிப்படையில் புலன் விசாரணை அமைய வேண்டும் என்ற அவரது அறிவுரையை காவல் துறை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
“He says in one judgement “in the long run that investigation is best which uses torture stratagems least, that Policeman deserves respect who gives fist rest and wits restlessness. மனதில் உரைக்கும்படி சொன்னால் "லத்தியை தூக்காதே புத்திக்கு வேலை கொடு'. நெத்தியடி அறிவுரை, உயர் கோட்பாடுகள் எல்லோருக்கும் பொருந்தும்.
டிசம்பர் 16 நிர்பயா தினம். என்ன கொடுமை? வன்முறை அனுசரிப்பு தினங்கள் கூடிக்கொண்டே போகின்றன. பாலியல் வன்முறை நிகழ்வுகள் நாட்டில் குறைந்தபாடில்லை.
எவ்வாறு இந்தப் பிரச்னையை அணுகுவது என்பதிலேயே குழப்பம். கடுமையான சட்டத்தாலா? காவல்துறையின் சீரிய நடவடிக்கையாலா? பொது இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்துவதாலா? கல்விக் கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலா என்று பல்நோக்கு செயலாக்க முறைகள் விவாதிக்கப்படுகின்றன.
உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணியக் கூடாது என்ற அறிவுரை மகளிர் அமைப்புகளைக் கொதிப்படைய செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறும் நல்லுலகம் நமது சமுதாயம்தான்.
குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தை கண்டு அசருவதில்லை. அவர்கள் பயப்படுவது திறமை வாய்ந்த, நேர்மையான காவல் துறையைக் கண்டுதான். அந்தத் திறமையையும், நேர்மையையும் காவல் துறையில் வேரூன்றச் செய்தால்தான் கடுங்குற்றங்கள் குறையும்.
குற்றவாளிகள் துப்பாக்கியைப் பார்த்து பயப்படுவதில்லை. விறைப்பாக நெஞ்சை நிமிர்த்தி பணிபுரியும் காவலன் தான் நன்மக்களால் மதிக்கப்படுகிறான். அதை உணர்ந்தால் தீர்வு பிறக்கும்.
உலக அளவில் பாலியல் வன்முறை பற்றிய புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கும். 35 சதவீத பெண்கள் ஏதாவது ஒரு விதத்தில் உடல் ரீதியான பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள். சில நாடுகளில் 70 சதவீதம் பேர் கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.
மேலும், உலகில் மூன்று கோடி பெண்கள் உடல் உறுப்புகள் சிதைக்கப்படும் கொடுமைக்கு இரையாகியுள்ளார்கள். அது போதாதென்று உலக அளவில் 70 கோடி சிறுமிகள் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். அதில் 30 சதவீதம் பதினைந்து வயதுக்குள்பட்ட சிறுமிகள். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி கிடையாது. பிள்ளைப் பிராயத்தின் வசந்தங்கள் இல்லை.
இத்தகைய வன்முறை, சமுதாயத்தை, பொருளாதாரத்தை நாட்டின் வளத்தை பாதிக்கிறது என்ற எச்சரிக்கை தகவலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2013-இல் 3,09,546. வழக்குகள், முந்தைய ஆண்டைவிட 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 
நவம்பர் 25 சுதந்திரப் போராளிகள் மிராபில் சகோதரிகள் டாமினிக்கன் நாட்டின் கொடுங்கோலன் ராபின் ட்டூஜில் போவால் 1960-ஆம் வருடம் கொல்லப்பட்டார்கள். அந்த தினம்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைவதற்கான விழிப்புணர்வு நாள்.
ஒவ்வொரு வருடமும் மனித உரிமை நாளன்று மையக் கருத்து ஒன்றை ஐக்கிய நாடுகள்  சபையின் மனித உரிமை ஆணையம் அளிக்கும். இந்த வருடம் மனித உரிமை 365 என்பதுதான் ஆணையத்தின் அறைகூவல்.
தினமும் நமது சிந்தனையில், பேச்சில், செயலில் மனித உரிமை பரிமளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய வருடங்களில் வறுமை ஒழிப்பு, மனித உரிமை, கல்வி, சித்தரவதை ஒழிப்பு, குழந்தைகள் பணியில் ஈடுபடுத்துவதை ஒழித்தல் போன்ற கணக்கில் அடங்கா மனித உரிமை பிரச்னைகளை, ஆணையம் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, நமது நாட்டின் கைலாஷ் சத்யார்தி இருவருக்கும் குழந்தைகள் உரிமைக்காக போராடியதற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பது நமது துணை கண்டத்திற்கே பெருமை.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனயோரா கட்டூன் என்ற சந்தேஷ்காலி கிராமத்திலுள்ள பதினைந்து வயது பெண், குழந்தை திருமணத்திற்கு எதிராகப் போராடி பல பச்சிளம் பெண்களை மீட்டிருக்கிறாள் என்ற விவரம் நமது ஊடகங்களில் வரவில்லை.
மலாலா தனது முக நூலில் புதுமைப் பெண் கட்டூனின் சாதனையைப் பாராட்டிய பிறகுதான் அனயோரா பிரபலமானாள். 180 கடத்தப்பட்ட குழந்தைகளை இது வரை மீட்டிருக்கிறாள். 35 குழந்தைத் திருமணங்களை நிறுத்தியிருக்கிறாள். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றியிருக்கிறாள். மேலும் கல்வியிலிருந்து விடுபட்ட 200 குழந்தைகளை மீண்டும் கல்வி பயில உதவியிருக்கிறாள். இதுவன்றோ சாதனை!
நிர்பயா கொடுமை நிகழ்ந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. மீண்டும் தில்லியில் சர்வதேச நிறுவனமான உபேர் கால் டாக்சியில் பயணம் செய்த பெண், பாலியல் கொடுமைக்கு இரையாகியிருக்கிறாள். பெங்களூரில் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. எத்தகைய அணுகுமுறை தேவை என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. 
நெட்டை மரங்களாக நின்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். பெட்டைப் புலம்பல் துணையாகாது. ஒருவரையொருவர் சாடுவதில் பயனில்லை. பிரச்னை என்று வந்து விட்டால் காவல்துறை தலையில்தான் விடியும்.
இதற்குத் தீர்வு கடுமையான, தீர்க்கமான, நேர்மையான நடவடிக்கை. காவல் நிலைய அளவில் அதற்கு உயர் அதிகாரிகள் ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டும்.
அநீதிக்கு எதிராகப் போராடினால்தான் நீதியை நிலைநாட்டமுடியும்.

நன்றி.தினமணி

1 comment:

  1. First casino game - Kookoo
    A quick overview of this site. The first casino 퍼스트 카지노 game is based on the famous French roulette dafabet table. The カジノ シークレット game can be played in a modern

    ReplyDelete

Maintained By Techmarketworld