Wednesday, February 25, 2015

இலவசங்களுக்காக, 48 ஆயிரம்



இலவசங்களுக்காக, 48 ஆயிரம் 

சென்னை: தமிழக அரசு வரி இல்லாத பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது. தமிழகத்தின், 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மொத்த வருவாய், 1.27 லட்சம் கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வருவாயில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என்ற பெயரில், இலவசங்களுக்காக, 48 ஆயிரம் கோடி ரூபாய், செலவிடப்படுகிறது. மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு, 35 ஆயிரத்து 720 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இலவசங்கள் மற்றும் ஊதியத்துக்கு, மொத்தமாக, 84 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகிறது. இது, மொத்த வருவாயில், 67 சதவீதம். மாநிலத்தின் நிதி பற்றாக்குறை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது.

இலவசங்களுக்கு செலவழிக்கும் தொகையை கண்மாய் தூர் வாரல், சுகாதாரம் காத்திடல், நெடுஞ்சாலை பராமரிப்பு என அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவழிக்கலாமே என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழக பட்ஜெட் குறித்து, நிதித்துறை செயலர் சண்முகம் கூறியதாவது: கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு பணிகளுக்கு, புதிய ஆள் எடுப்பை குறைக்கவும், துறைவாரியான நிர்வாக செலவுகளை குறைக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள், வரும் காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

மாநில அரசுக்கு, மத்திய அரசு அளிக்கும், நிதியின் அளவு, குறைந்து வருகிறது. குறிப்பாக, வேளாண் துறைக்கான மத்திய அரசின் நிதி, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. கடந்த, 2012-13ல், 700 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின், வேளாண்மை ஒதுக்கீடு, 2013-14ல், 300 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இருந்தும், தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டில், வேளாண்
துறைக்கு, 20 சதவீத ஒதுக்கீட்டை அளித்துள்ளோம்.
டாஸ்மாக்இலக்கு: நடப்பு நிதியாண்டில், 23 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, ‘டாஸ்மாக்வருமானம், 2014-15ல், 26 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும். இந்த வருவாய், விற்பனை மற்றும் கலால் வரி மூலம், அரசுக்கு கிடைக்கும். இதே நேரத்தில், பத்திரப் பதிவுத் துறையில், 650 கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிக வரி மூலமும், எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. போக்குவரத்து துறையில், 300 கோடி ரூபாய், வருவாய் குறைந்துள்ளது. டீசல் மானியமாக, போக்குவரத்து துறைக்கு, 500 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.
கட்டுக்குள் கடன்:
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை, மொத்த உற்பத்தி மதிப்பில், 3
சதவீதம் வரை இருக்கலாம். ஆனால், 2.73 சதவீதம் தான் உள்ளது. இதேபோல், 13வது நிதிக்குழு பரிந்துரைப்படி, மொத்த உற்பத்திமதிப்பில், 3 சதவீதம் வரை, ஆண்டுதோறும் கடன் பெறலாம். இந்த அனுமதிப்படி, தமிழகம் 2013-14ல், 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை பெறலாம். ஆனால், 20 ஆயிரம் கோடி ரூபாய் தான், கடன் பெற்று உள்ளோம். கூடுதல் கடன் பெறுவதால் ஏற்படும் வட்டிச் சுமையை குறைக்க, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Maintained By Techmarketworld